பூமியில் வாழும் எல்லா உயிர்களும் உற்சாகமாகவே வாழ்கிறது. ஆனால் மனிதராகிய நம் குறுகிய மனதில்தான் சலிப்பும், எரிச்சலும், அவநம்பிக்கையும் ஊற்று எடுக்கின்றன.
வாழ்க்கை என்பதே உற்சாகமாய் வாழத்தானே..?
செயலில் தோல்வி அடைந்தால், அதற்காக ஏன் எரிச்சல் கொள்ள வேண்டும்.?
நாம் சந்தித்தது தோல்வியா?. இருந்திட்டு போகுது..., தோல்வியை நினைத்து. நினைத்து உற்சாகம் இன்றி வேதனையும் எரிச்சலுமாக இருந்தால் என்ன பலன் ?
நம்மை நாமே தோற்கடித்துக் கொள்ளவே இந்த மனநிலை வழி வகுக்கும்.
நம்மிடம் உள்ள சின்னஞ்சிறு குறைகளை பிறர் சுட்டிக்காட்டும் போது கோபப்படாமல் அதனை திருத்தி கொள்ளவதே மகிழ்ச்சியாக இருக்க வழி வகுக்கும்.
நம் தோல்விகளை, நம் குறைகளை ஒப்புக்கொள்ள ஒருபோதும் வெட்கப்படக் கூடாது.
உற்சாகமாக விரைந்து செல்லும் எறும்புகளைக் கவனித்து பார்த்தால் ஒன்று தெளிவாகும். அதில் ஒரு எறும்பின் பாதையில் சும்மா விரலை வைத்து மறித்துப் பார்த்தால். அது நின்று விடாது. விரலைச் சுற்றி வரும்.எங்கே வழி இருக்கிறது என்று நாலா பக்கமும் தேடும்.
எத்தனை தடைகள் போட்டாலும் எப்படியாவதுதன் பயணத்தைத் தொடரும். உயிர் உள்ளவரை அது தன் உற்சாகத்தை இழப்பதும் இல்லை; நம்பிக்கையை விட்டுவிடுவதும் இல்லை.
சிறு புல்லைப் பறித்து அதன் வேர்களைப் பார்த்தால், என்னவொரு உற்சாகத்துடன் பூமியில் உள்ளே ஆழமாக வேர்களை விட்டு அவை ஊன்றிக் கொண்டு இருப்பது நமக்கு புரியும்.
நாம் ஒருபோதும் நம் மீதே அவநம்பிக்கை கொள்ளாமல், எப்போதும் நம்பிக்கையுடன் செயல்படவேண்டும்.
நம்மிடம் இருக்கும் திறமையை நாமே நம்பாவிட்டால் வேறு யார்தான் நம்புவார்கள்.
அளவுக்கு அதிகமான பிரச்சனைகள் இருந்தாலும், முக இறுக்கத்துடன் இல்லாமல், சிரித்த முகத்துடன் இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை நம்மிடம் அதிக பலம் பெறும்.
Comments
Post a Comment