25,00,000 ரூபாயை முதலீடு செய்தால், மாதம்தோறும் 1,80,000 கிடைக்கும் என்று இரண்டு பேர் ஆசை காட்டி, நடிகை சினேகாவை ஏமாற்றியிருக்கிறார்கள். கடந்த மே மாதம் அவர் பணத்தைத் தந்த பின்பு, அவருக்கு மாதம்தோறும் தருவதாகச் சொன்ன பணம் வராமல் போனதால் நேற்று அவர் சென்னை போலீஸாரிடம் புகார் செய்திருக்கிறார். அவர் ஏமாற்றப்பட்ட மாதிரி நீங்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் எனில், பின்வரும் 5 விஷயங்களை நிச்சயம் கவனத்தில் கொள்ளுங்கள்.
1. அவர்களின் பேச்சைக் கேட்கவே கேட்காதீர்கள்
மிக அதிகமான லாபம் கிடைக்கும் என்று சொல்லி உங்களை யாராவது அணுகினால், இந்த விளையாட்டே வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். இவர்கள் சாத்தான் வேதம் ஓதுவது மாதிரி. இவர்களின் பேச்சைக் கேட்க ஆரம்பித்தாலே போதும், நம் மனதை மயக்கி, நம்மிடம் இருக்கும் பணத்தைப் பிடுங்காமல் விடமாட்டார்கள்.
`சதுரங்க வேட்டை’ படத்தில் வரும் ஹீரோவைப்போல, இது மாதிரியான மிக மென்மையாகப் பேசுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் சொல்வதை எந்த வகையிலும் சந்தேகப்படுகிற மாதிரி இருக்காது. `அட, இவ்வளவு லாபம் கிடைக்குமா’ என்கிற ஆச்சர்யத்தில் இவர்களின் பேச்சைக் கேட்க ஆரம்பித்தால், நம் பணத்தை நாம் இழக்க வேண்டியதுதான்! எனவே, அதிக லாபம் தருகிறோம் என்று யார் சொன்னாலும் அவர்களிடம் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.2. பேராசை பெருநஷ்டம்
பேராசை எப்போதும் பெருநஷ்டத்தை ஏற்படுத்தும். இது மாதிரியான மோசடிப் பேர்வழிகள் நம்மிடம் இருக்கும் பேராசையை முதலில் தூண்டுவார்கள். அந்தப் பேராசை நம்மைப் பல தவறுகளைச் செய்ய வைக்கும். 25,00,000 ரூபாய்க்கு மாதம் தோறும் 1.8 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பது மிக அதிகமான வருமானம். வங்கியில் 6 - 7% மட்டுமே தருவார்கள். சில திட்டங்கள் மூலம் அதிகபட்சம் 8 - 9% வருமானம் கிடைக்கும். இதைத் தாண்டி வருமானம் வேண்டும் என்று நாம் பேராசைப்பட்டால், நம் பணத்தை இழப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். குறைந்த வருமானமாக இருந்தாலும், நம் பணம் பாதுகாப்பாக இருக்குமா என்று பார்ப்பது முக்கியம்.
அதிக லாபம் தருகிறோம் என்று சொல்லும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடமோ, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடமோ பதிவு செய்துள்ளனவா என்று நாம் பார்க்க வேண்டும். முறையான அரசு அமைப்புகளில் பதிவு செய்யாத நிறுவனங்களிடம் நாம் பணம் தரவே கூடாது. சில நிறுவனங்கள், `கார்ப்பரேட் அபையர் மினிஸ்ட்ரியில் பதிவு செய்திருக்கிறோம்’, `ஜி.எஸ்.டி வாங்கி இருக்கிறோம் என்றெல்லாம் சொல்லும். கம்பெனியைப் பதிவு செய்திருப்பதாலோ, ஜி.எஸ்.டி வாங்கியிருப்பதாலோ நம் பணத்துக்குப் பாதுகாப்பு கிடைத்துவிடாது. முறையான அமைப்புகளிடம் பதிவு செய்த நிறுவனங்கள் மட்டுமே தவறு செய்தால் அவற்றின் மீது புகார் சொல்ல முடியும். அபராதமும் விதித்து, முதலீட்டைத் திரும்ப வாங்கித் தரவும் முடியும். முறையான அரசு அமைப்புகளில் பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடம் இப்படி பணம் தந்து, அந்தப் பணம் திரும்ப வராமல் போனால், அதற்காகக் காவல் நிலையம் தவிர, வேறு எங்கும் போய் புகார் செய்ய முடியாது!
4. தரச் சான்றிதழைக் கவனியுங்க!
சரி, மோசடி நிறுவனங்களில் பணம் போடவில்லை. வேறு எதில் பணம் போடலாம் என்று கேட்கிறீர்களா?
தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்ட ரிசர்வ் வங்கி/செபி ஆகிய அமைப்புகளிடம் அனுமதி பெற்று, பாண்டுகளை வெளியிட்டு பணத்தைத் திரட்டுகின்றன. இதற்கு `கார்ப்பரேட் பாண்ட்’ என்று பெயர். இந்த பாண்டுகள் மூலம் சுமார் 7 - 9% வருமானம் கிடைக்கும். இந்த நிறுவனங்களில் நல்ல தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனங்களில் நாம் பணம் போடலாம். `ஏஏஏ’, `ஏஏ’, `ஏ’ ஆகிய தரச்சான்று கொண்ட கார்ப்பரேட் பாண்டுகளில் மட்டும் முதலீடு செய்ய பரிசீலிக்கலாம். இந்தத் தரச் சான்றிதழ் பெற்ற பாண்டுகள்கூட முழுக்க முழுக்க ரிஸ்க்கே இல்லாதவை என்று சொல்ல முடியாது. மிகக் குறைந்த, குறைந்த ரிஸ்க் கொண்டவை என்றுதான் சொல்ல முடியும்.
கொஞ்சம் ரிஸ்க் எடுத்து, 15 ஆண்டுக் காலம் முதலீடு செய்யத் தயார் எனில், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால், 10 - 12% வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முன்பு பங்குச் சந்தை என்றால் என்ன, பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் என்றால் என்ன என்பதை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு, முதலீடு செய்யத் தொடங்குவது நல்லது. ஆரம்பத்தில் கொஞ்சம் பணம் போட்டு, பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள் பற்றி நன்கு புரிந்துகொண்ட பின், அதில் அதிகமாக முதலீடு செய்யத் தொடங்கலாம்!
Comments
Post a Comment