எது வீணான நிலம் (Waste Land)
***************************************************
(எழுத்தாளர் தோழர் முத்துநாகு அவர்களுடலய முகநூல் பதிவில் பதியபட்ட கட்டுரை இது.
https://www.facebook.com/100002104018789/posts/4288484131231678/ )
தமிழக நிலப்பரப்பில் வேஸ்ட் லேண்ட் என்ற சொல்லாக்கம் இல்லை. இது பிரிட்டீஷ் ஆட்சியில் வந்தது. ஐந்திணையில் பாலை நிலம் திரிந்து மீண்டும் மாறிவிடும். அதே போல் நஞ்சை, புஞ்சை, மானாவாரி, தரிசு.
இதில் தரிசு நிலத்தை பொட்டல் தரிசு, மேய்ச்சல் தரிசு, உப்புத் தரிசு, உவர் தரிசு, சுண்ணாம்புத் தரிசு, செவல் தரிசு, கரிசல் தரிசு, மணல் தரிசு, பாறைக்குட்ட தரிசு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதே சொல் முகலாயர் ஆட்சியில் ஜாரி என்ற சொல்லாடலுடன் உவர் ஜாரி பூமி, உப்பு ஜாரி பூமி, கரிசல் ஜாரி பூமி என்று சொன்னார்கள்.
தரிசு நிலங்களில் மட்டுமே மனித குலத்தை காக்க வல்ல மூலிகைகள் முளைத்துக்கிடக்கும். இதனால் தான் இங்கு மேய்திடும் வெள்ளாடு, செம்பறி ஆடுகளின் கறி சுவையானதாகும் உடல் நலத்திற்கு நலம் தருவதாகவும் உள்ளது. குறிப்பாக வெள்ளாட்டங்கறி நலம் விளைவிப்பதாக உள்ளது.
உலக வங்கி என்ற தனியார் வங்கி உதவியுடன் இந்திய வனத்துறையினர் மூலிகை வனம் என வனத்துறையே உருவாக்கினார்கள். அதற்குள் எந்த பண்டுவனும் மூலிகை பிடிங்கியதாகவோ, குறைந்தபட்சம் பொதுமக்களுக்கு அந்த மூலிகை செடிகொடிகளை வனத்துறை அறிமுகப்படுத்தியதாகவோ செய்திகள் படித்திருக்கவோ, அல்லது வனத்துறை பதிவேட்டில் பதிவுகளோ இருக்காது.
மூலிகைகள் எந்த மாதிரியான சூழலில் வாழும் என்பதை அறிந்த மரபு சார்ந்த மருத்துவர்கள் அரிதாகிவிட்டார்கள். இதை வளர்த்தெடுக்க தனியார்களிடம் வளர்ந்துள்ளது. ஆனால் அது அனைத்து மூலிகைகளுக்கும் பொறுந்தாது என்பது அறிந்த உண்மை.
இந்தியாவை ஆண்ட பிரிட்டீஷ் ஆட்சியர்களின் கொள்கை முடிவான 1857,1882ம் ஆண்டுகளில் கொண்டு வந்த வனச்சட்டத்தில் 1972, 1994, 2004 ஆண்டுகளில் மட்டுமே இந்திய துணைக்கண்டத்தை ஆண்ட அரசுகள் சிறிய மாற்றம் கொண்டு வந்தார்கள், அதுவும் வனத்துடன் வாழ்ந்த வனத்தை அறிந்த அறிவு சார் சமூகங்களை வெளியேற்ற போடப்பட்ட சட்டமே தவிர வனத்தை அறிந்திடும் சட்டமல்ல என்பது அறிந்ததே.
படத்தில் உள்ள சாலி மரம் பாறை ஓரத்தில் தானாக முளைத்தது. இந்தப்பாறை வெப்பம், சாலி மரத்தின் வெப்பம், பாறை இடுக்கில் மழை காலத்தில் சேமிக்கும் நீரை உறுஞ்சும் தன்மை கொண்ட மூலிகைகள் சாலி மரத்தூரில் முளைத்து அம்மரத்தில் படர்ந்துள்ளது. இந்த கதகதப்பான இடத்தை குதுவல் (குதுகுதுப்பு இளம் சூடு) என மக்கள் வழக்கு மொழியிலும் சங்க இலக்கியத்தில் இச்சொல் உள்ளது.)
இந்தக்குதுவலில் பிரண்டைக்கொடி, காட்டு மல்லிக்கொடி, குண்டு முத்துக்கொடி, தண்ணீர் விட்டான்கிழங்குக் கொடி, மொசுமொழுக்கைகொடி, கொல்லங்கோவைக்கொடி, வெள்ளருகு, கண்விழிப்பூ (அ) கலப்பை கிழங்கு என்ற செங்காந்தல் என முளைத்து படந்துள்ளது.
இது போன்ற குதுவல் சூழலை நமக்கு தரிசு நிலம் அல்லது வேஸ்ட் லேண்ட் என்ற கருத்தக்கத்தை உருவாக்கி வைத்துள்ளது கல்வியும் அறிவியல் சார்ந்த அரசியல் சமூக கட்சி இயக்கங்களும்.
Comments
Post a Comment