அமெரிக்காவின் அடியில் உட்கார்ந்து கொண்டு அவர்களின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய குட்டி நாடு என்று சொல்லப்படும் கியூபாவின் தலைசிறந்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து முருங்கையை வரவழைத்து தனது தோட்டத்தில் தானே வளர்த்தார். அதை பெருக்கி தன் தேசமெங்கும் நட்டு வளரச்செய்தார். 'கியூபாவில் இருக்கும் எல்லோரும் வீட்டுக்கொரு முருங்கை மரம் வளருங்கள்!' என்று அறிவித்தார் என்று கியூபாவின் அதிகாரப் பூர்வ தரவுகள் சொல்கின்றன.
முருங்கையில் அத்தனை நோய் எதிர்ப்பு சத்து இருப்பதே அவரது அந்த செயல்பாடுகளுக்கு காரணம்.
உடல் சூட்டைத் தணிக்கிறது, உடலுக்கு வலு சேர்க்கிறது, முடி உதிர்வை தடுக்கிறது, ரத்த சோகையை நீக்குகிறது (இரும்பு!), சுவாசக்கோளாறு சளி பிரச்சினைகள் நீங்கும், ஆஸ்த்துமா, மலட்டுத்தன்மை நீங்கும் என என்னென்னவோ சொல்லும் பெரிய பட்டியல் ஒன்று உள்ளது முருங்கைக்கீரைக்கு. நோய் எதிர்ப்பு சத்து கூட்டும் என்பதே போதுமே முருங்கையை நாம் ஏன் உண்ண வேண்டும் என்று சொல்ல.
'பரமன்... எங்க பரமன், முருங்கைய கீரையா கடைஞ்சா பசங்க தொடக்கூட மாட்டேங்கறாங்க. கீரையை பெரட்டி தாளிச்சு வச்சா, பெரிசுங்க தொட மாட்டேங்கறாங்க. தெனமும் முருங்கைக் கீரையை சூப்பாகவா செய்ய முடியும்?' என்பவர்களுக்கு:
ஆமாம், முருங்கை சூப் அதிக நலம் தரும் உணவுதான். ஆனால் தினமும் அதையே செய்ய முடியாதே, ஆனால், முருங்கை உணவில் வேண்டுமே என்பவர்களுக்கான எளிய முருங்கை உணவு இதோ:
ஒரு கட்டு முருங்கைக்கீரையை பிரித்து, கீரையை உருவி ஆய்ந்து எடுத்து கழுவிக் கொள்ளவும். முறத்திலோ பாத்திரத்திலோ இட்டு நிழலில் சில நாட்கள் காய விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விடாமல் மிளகு, ஜீரகம், கடலைப் பருப்பு, பூண்டு, கொஞ்சம் பெருங்காயம் (கறிவேப்பிலை வேண்டுவோர் ஒன்றிரண்டு போட்டுக் கொள்ளலாம்), வரமிளகாய், தனியா ஆகியவற்றை ஒவ்வொன்றாக இட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும். (தூக்கலான சுவை வேண்டுவோர் சிறிதளவு புளியையும் சேர்த்து வறுக்கவும்).
உலர்த்தி வைத்திருந்த முருங்கை இலைகளை வாணலியில் இட்டு வறுக்கவும். ஆற வைத்து இரண்டையும் மிக்ஸியில் இட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து அடித்து எடுத்தால் ஊட்டச்சத்துள்ள 'முருங்கை பொடி' தயார்.
சுடச் சுட சோற்றில் ஒன்றரைத் தேக்கரண்டி முருங்கைப் பொடியை இட்டு, நல்லெண்ணெய்யோ நெய்யோ விட்டு (சிலருக்கு கொஞ்சம் உப்பும் சேர்க்க வேண்டி வரலாம்), பிசைந்து ஒன்றிரண்டு உருண்டைகள் உண்டாலும் கூட அன்றைய பங்குக்கான ஊட்டச்சத்து வந்து விடுமே. ஓரிரெண்டு உருண்டைகள்தான் என்றால் உங்கள் குழந்தைகளும் 'ம்ம்ம்.. ஓக்கே!' என்பார்களே! செய்யுங்கள்,
(Receipe courtesy - பானுமதி ஸ்ரீராமுலு.
உண்டு ருசித்தது - பரமன் பச்சைமுத்து)
உண்ணுங்கள், உறுதி கூட்டுங்கள்.
நன்றி- பரமன் பச்சைமுத்து (முகநூலில் இருந்து)
சென்னை
09.06.2021
#Moringa
#MoringaForHealth
#MoringaPowder
#MurungaiPodi
#Food
#FoodForHealth
Comments
Post a Comment