ஊராட்சி மன்றம் அதன் அலுவலகத்தில் அலுவல்களை நடத்துவதற்கு ஒவ்வொரு மாதத்திலும் ஒரு தடவையேனும் அது ஏற்பாடு செய்யக்கூடிய நாட்களிலும், காலத்திலும் மற்ற காலங்களிலும் எவ்வப்போது தலைவர் கூட்டம் கூட்டுகிறாரோ அவ்வப்போதும் கூட வேண்டும். எக்காரணம் கொண்டும் இரு கூட்டங்களுக்கு இடையே உள்ள காலம் 60 நாட்களுக்கு மேற்படக்கூடாது.
கூட்ட அறிவிப்பு :-
கூட்டம் நடத்தப்பட போகும் நாள், காலம் அக்கூட்டத்தில் விவாதிக்கப் போகும் பொருள்கள் ஆகியவை பற்றிய அறிவிப்பு கூட்ட நாளுக்கு குறைந்தது 3 நாட்களுக்கு முன்னதாக கொடுக்கப்பட வேண்டும்.
அவரச நிமித்தம் கருதி 24 மணி நேரத்திற்கு குறையாத அறிவிப்பு கொடுத்துவிட்டு கூட்டத்தை கூட்டலாம். அவசரக் கூட்டத்திற்கான காரணம், இடம், தேதி, காலம் மற்றும் அங்கே நடத்தப்படவிருக்கிற அலுவல்கள் ஆகியவற்றை அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
சிறப்புக் கூட்டம் :-
சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளுக்கிணங்க ஒரே ஒரு பொருள் பற்றி சிறப்பாக விவாதிப்பதற்காக கூட்டப்படுகின்ற சிறப்புக் கூட்டத்தில் குறிப்பிட்ட சிறப்புப் பொருள்களைத் தவிர மற்ற பொருள்கள் வைத்து முடிவு ஏதும் எடுத்தல்கூடாது.
பொருள் நிரல் :-
1. கூட்டத்திற்கான பொருள் நிரல் தலைவரால் தயாரிக்கப்பட வேண்டும். உறுப்பினர்களும் கூட்டத்தில் விவாதிக்கும் பொருட்டு பொருள்நிரல் கொண்டு வரலாம். அதனைக் கூட்டம் நடைபெறும் நாளுக்கு 7 நாட்கள் முன்பு தலைவருக்கு விவரங்களை அளிக்க வேண்டும். தலைவர் அதன்மீது தனது கருத்துகளுடன் கூட்ட விவாதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
2. தலைவர் சாதாரண கூட்டத்திற்கான பொருள்நிரல் தயாரிக்கும்பொழுது மற்றவற்றுடன் கீழே குறிப்பிட்ட பொருள்களையும் சேர்க்க வேண்டும்.
மாதம் முடிய கிராம ஊராட்சியின் அனைத்து கணக்குகளில் வரவினம் மற்றும் செலவினங்கள் தெரிவிக்கும் விவர அறிக்கை
மாதம் முடிய கிராம ஊராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ள அனைத்து திட்டங்கள், திட்டச் செயல்பாடுகள் மற்றும் பணிகளின் முன்னேற்றம்
ஒவ்வொரு நிதியாண்டிற்க்கான கிராம ஊராட்சியின் நிர்வாக அறிக்கையினை அடுத்த ஆண்டில் 3 மாதத்திற்குள் வைக்க வேண்டும்.
சிற்றூராட்சியின் தணிக்கை அறிக்கை மற்றும் விளக்கக்குறிப்பு பெறப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தில் வைக்க வேண்டும்
உயரதிகாரிகளின் பயண அறிக்கை மற்றும் திட்டப் பணிகளை பார்வையிட்ட அறிக்கை பெறப்பட்ட பின்பு நடைபெறும் முதல் சிற்றூராட்சியின் கூட்டத்தில் வைக்க வேண்டும். சிற்றூராட்சிகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும்.
3. சிற்றூராட்சியின் நிர்வாகத்தில் உறுப்பினர்கள் திறம்பட பங்கு கொள்வதை உறுதி செய்யும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள், ஊரக வளர்ச்சி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களிடமிருந்து பெறப்படும் பல்வேறு அறிவுரைகள் மற்றும் வழிகாட்டிகளைக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்த்து ஊராட்சிக் கூட்டத்தில் வைக்க வேண்டும்.
கூட்ட அறிவிப்பை நேரடியாக உறுப்பினர்களுக்கு சார்பு செய்ய வேண்டும். நேரடியாக சார்பு செய்ய முடியவில்லை என்றால் குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினரிடம் சார்பு செய்ய வேண்டும். அவ்வாறு வயது வந்த உறுப்பினரும் யாரும் இல்லையென்றால் கூட்ட அறிவிப்பை பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். அல்லது அவர்கள் கடைசியாக குடியிருந்த வீட்டில் அந்த விஏஓ முன்னிலையில் முக்கியமான இடத்தில் ஒட்டியும் சார்பு செய்யலாம். கூட்ட அறிவிப்பை நிகழ்ச்சி நிரலுடன் கிராம ஊராட்சியின் ஒரு உறுப்பினருக்கு முறையாக சார்பு செய்யாவிடில் கூட்ட நடவடிக்கைகள் அனைத்தும் செல்லாதாகிவிடும்.
வேண்டுகோள் கூட்டம் :-
கிராம ஊராட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்கு குறைவில்லாத உறுப்பினர்கள் கூட்டம் நடத்த வேண்டுமென்ற கோரிக்கையினை, அதற்கான தேதி, என்ன காரணத்திற்காக கூட்டம் நடத்த வேண்டும் என்ற விபரங்களுடன் கிராம ஊராட்சித்தலைவருக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் கொடுத்தால், தலைவர் சிற்றூராட்சியின் கூட்டத்தை கூட்ட வேண்டும். இத்தகைய வேண்டுகோளினை அலுவலக நேரங்களில், கிராம ஊராட்சி அலுவலகத்தில் தலைவரிடமோ அல்லது தலைவர் பொறுப்பு வகிக்கக்கூடிய நபரிடமோ கூட்டம் நடத்த வேண்டிய நாளுக்கு 7 முழு நாட்களுக்கு முன்னதாக கொடுக்க வேண்டும்.
தலைவர் வேண்டுகோள் கொடுத்த 48 மணி நேரத்திற்குள் கூட்டம் நடத்தக் கேட்டுக் கொண்ட நாளிலோ அல்லது 3 நாட்களுக்கு உள்ளாகவோ கூட்டத்தை கூட்ட தவறினால் வேண்டுகோள் விண்ணப்பத்தில் ஒப்பமிட்ட உறுப்பினர்கள் இதர உறுப்பினர்களுக்கு அறிவிப்புக் கொடுத்து கூட்டத்தை கூட்டலாம்.
ஊராட்சி கூட்டங்களுக்கு பொதுமக்கள் வருகை உண்டா?
பொதுவாக சிற்றூராட்சியின் கூட்டத்திற்கு பொதுமக்கள் வருகை தரலாம். இருப்பினும் சிற்றூராட்சியின் தலைவர் அவராகவோ அல்லது கிராம ஊராட்சியின் வேண்டுகோளின் பேரிலோ சில குறிப்பிட்ட நேரங்களில் அதற்கான காரணங்களை நடவடிக்கைக் குறிப்பில் பதிந்து பொதுமக்களோ அல்லது வேறு குறிப்பிட்ட நபர்களோ கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாதென்று உத்தரவிடலாம் அல்லது வருகையை முறைப்படுத்தலாம்.
உறுப்பினர்களும் தலைமை வகிக்கும் உறுப்பினரும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது அதற்கான பதிவேட்டில் கையொப்பம் செய்ய வேண்டும். கூட்டம் முடிந்தவுடன் தலைமை வகித்த உறுப்பினர், எத்தனை உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்று வருகைப் பதிவேட்டில் பதிவு செய்து கடைசியில் கையெழுத்து போட வேண்டும்.
சிற்றூராட்சியின் கூட்டம் நடைபெறும் நேரம் முழுவதும் குறைந்தது 3 உறுப்பினர்களோ அல்லது கிராம ஊராட்சியில் அப்போது உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களோ இவற்றில் எது அதிகமோ அந்த அளவு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால் எந்த ஒரு பொருளையும் விவாதித்து முடிவெடுக்க முடியாது.
கூட்டம் நடத்த குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அரை மணி நேரத்திற்குள் தேவையான உறுப்பினர்கள் வரவில்லை என்றால், கூட்டத்திற்கு வருகை தந்துள்ள உறுப்பினர்கள் மேலும் காத்திருக்க சம்மதித்தால் அன்றி கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.
குறைந்த அளவு உறுப்பினர்கள் வரவில்லை என்று கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டால், கிராம ஊராட்சித் தலைவர் ஒத்தி வைக்கப்பட்ட கூட்டத்தை நடத்த புதிய அறிவிப்பை அனுப்ப வேண்டும்.
Comments
Post a Comment